ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதால், மரணமடைந்தோரின் உடல்களை ஆரணி ஆற்று வெள்ளத்தில் சுமந்து செல்லும் அவலம் நீடிக்கிறது.
ஆந்திர மாநிலம்- நகரி அருகே உருவாகும் ஆரணி ஆறு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக பாய்ந்து பழவேற்காடு ஏரியில் கலக்கிறது. 108 கி.மீ., நீளமுள்ள இந்த ஆரணி ஆற்றில், தற்போது வடகிழக்கு பருவமழையால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த மழைநீரில், பெரியபாளையம் அருகே ஆரணி அடுத்த கொசவன்பேட்டை, அஞ்சாத்தம்மன் கோயிலுக்கும், புதுப்பாளையத்துக்கும் இடையே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் ஏற்கனவே அடித்து செல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆரணி பகுதியில் மங்களம் கிராமத்துக்கு செல்ல ஆரணி ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மண் பாதையும் இருந்த சுவடு இல்லாமல் மறைந்துவிட்டது.
இதனால், புதுப்பாளையம், மங்களம், காரணி, எருக்குவாய், நெல்வாய், முக்கரம்பாக்கம், சின்னபுலியூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 12 கி.மீ., தூரம் சுற்றி மாற்றுப் பாதையில், ஆரணி, பொன்னேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக சென்று வரும் சூழல் நீடிக்கிறது.
இந்நிலையில், ஆரணி பகுதியில் வசித்து வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர், உடல் நலக்குறைவால் நேற்று (டிச.28) உயிரிழந்தார். ஆகவே, அவரின் உடலை ஆரணி ஆற்றுக்கரையில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய அவரது உறவினர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் உடலை ஆரணி ஆற்று வெள்ளத்தில் ஆபத்தான முறையில் அவரது உறவினர் சுமந்து சென்று, மயானத்தில் தகனம் செய்தனர்.
மரணமடைந்தோரின் உடல்களை ஆரணி ஆற்று வெள்ளத்தில் சுமந்து செல்லும் அவலம் நீடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அஞ்சாத்தம்மன் கோயில்-புதுப்பாளையம் இடையே ஆமைவேகத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே நடந்து வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.