மக்களை ஏமாற்றிவர்களுக்கு செல்போன் மூலம் பாடம் புகட்டுங்க: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பேச்சு


வண்டலூர்: மக்களை ஏமாற்றிய பேர்வழிகளுக்கு செல்போன் மூலம் சரியான பாடத்தை புகட்டுங்கள் என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பயிற்சி பட்டறை மற்றும் நேர்காணல் வண்டலூரில் மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர் கே.பி. காசி ராஜபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர். ராஜ் சத்யன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றுகையில் பேசியதாவது: ''2008ஆம் ஆண்டு இதய தெய்வம் அம்மா அவர்கள் பாசறையை அமைத்தார்கள். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைவதற்கு பாசறை முக்கிய பங்காற்றியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது இயக்கத்தை சேர்ந்த அணிகள் நமது வெற்றிக்கு முக்கிய பங்கினை ஆற்றுகிறது. அதுபோல வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்காற்றும் என்பது உறுதி.

இன்றைக்கு மக்கள் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்த ஒரு மோசமான சம்பவம் பற்றி மீடியாக்கள் வெளிப்படுத்தவில்லை. இதனை வெளியுலகத்திற்கு வெட்ட வெளிச்சமாக்கியது நமது தகவல் தொழில்நுட்ப பிரிவாகும். அதிமுகவினர் மட்டும் தான் மக்களுடைய தேவை என்ன? அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்ற மனநிலையினை கொண்டவர்கள். அதேசமயம் களத்தில் இறங்கி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவர்களும் அதிமுகவினர்தான்.

ஆனால் திமுகவினர் அப்படி இல்லை. யாரிடம் எப்படி பணத்தை பிடுங்குவது, எந்த பிரியாணி கடையில் ஓசியாக பிரியாணி வாங்குவது, யாரை மிரட்டி பணம் பறிப்பது என்ற மனநிலை உடையவர்கள். அதனால் தான் டீக்கடை முதல் பிரியாணி கடை வரை திமுகவினர் ரகளையில் ஈடுபடுகின்றார்கள்.

திமுகவின் அராஜகங்கள், அட்டூழியங்கள் மக்களை சென்றடைய டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தி.மு.க.வினரின் அவலத்தை வெளிப்படுத்துங்கள். செங்கலை கையில் தூக்கிக்கொண்டு மக்களை ஏமாற்றிய பேர்வழிகளுக்கு செல்போன் மூலம் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப பிரிவினை கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

x