கோவை: இந்திய நெசவுத்துறை நவீனமயமாகி வருகின்றன. கடந்த 3.5 ஆண்டுகளில் ரூ.18,500 கோடி மதிப்பில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஜவுளித்தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய நெசவுத்துறை நவீனமயமாகி வருகின்றன. கடந்த 3.5 ஆண்டுகளில் ரூ.18,500 கோடி மதிப்பில் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஜவுளித்தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தறிகள் கொண்டு இயக்கப்படும் நெசவுத்துறை பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. உள்நாடு மற்றும் பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவும் வகையில் ஜவுளிப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்திய ஜவுளி உற்பத்தி சங்கிலி தொடரில் சீனாவை ஒப்பிடும் போது நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் குறைந்து காணப்பட்டன. தற்போது அந்த நிலை மெல்ல மாறி வருகிறது. இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிநவீன ஏர்ஜெட் மற்றும் வாட்டர்ஜெட் தறிகளை இயக்குமதி செய்து வருகின்றனர். கடந்த 2021-22 ஆண்டில் இத்தகைய இயந்திரங்கள் இறக்குமதி ரூ.3,818 கோடியாக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் ரூ.6,440 கோடி, 2023-24-ல் ரூ.5,500 கோடி என தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிதியாண்டில் முதல் ஏழு மாதங்களில் ரூ.2,700 கோடி மதிப்பில் தறிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
தமிழகம், மஹாராஷ்ட்ரா மாநிலங்கள் ஏர்ஜெட் தறிகளிலும், குஜராத் மாநிலம் வாட்டர்ஜெட் வகையான தறி இயந்திரங்களை நெசவுத்துறையில் பயன்படுத்த அதிக முதலீடு செய்து வருகின்றன. நெசவுத்துறை நவீனமமாக வேண்டியது மிக அவசியம். கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய பணிகளுக்கு உதவும் வகையில் நவீன இயந்திரங்கள் இறக்குமதி அதிகரித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால் இந்திய ஜவுளித்துறையின் போட்டித்திறன் மேம்படும்.' இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.