மறைமலை நகரில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு  அமைதி ஊர்வலம்


மறைமலை நகர்: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதல் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று மறைமலை நகரில் அக்கட்சித் தொண்டர்கள் அமைதி ஊர்வலம் நடத்தி அன்னதானம் வழங்கினர்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் மறைமலை நகரில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மாபெரும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. மறைமலைநகர் நகர செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை மாவட்ட செயலாளரும் முன்னாள் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினருமான அனகை டி. முருகேசன் பங்கேற்று அமைதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த பேரணி மறைமலைநகர் ஆர்ச் அருகில் தொடங்கி பாவேந்தர் சாலை வழியாக பாலாஜி திருமண மண்டப வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல்வேறு நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

இதேபோல் படப்பை பேருந்து நிறுத்தம் அருகில் குன்றத்தூர் ஒன்றிய துணை செயலாளர் தென்னரசு தலைமையில் விஜயகாந்த் நினைவு தினத்தை ஒட்டி நினைவஞ்சலி நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் சிலம்பரசன் தலைமையில் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை கண்டிகை பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் இளைஞர் அணி செயலாளர் நாகராஜன் தலைமையில் மாம்பாக்கம் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

x