மதுரை: மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 70 சதவீத வயர்மேன்கள் காலி பணியிடங்களால் மின் பராமரிப்பு பணி கேள்வி குறியாக இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிகிறது.
மதுரை சத்தியசாய் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான என்ஜி.மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வயர்மேன்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டிருந்தார். இதற்கு தமிழ்நாடு மின்வாரியம் பதில் அளித்தது. இதன்மூலம் மதுரை உட்பட 4 மாவட்டத்திலும் 1267 வயர்மேன்களுக்கான பணியிடங்களில் 375 பேர் மட்டுமே தற்போது பணியில் இருக்கின்றனர். 892 வயர்மேன் காலி பணியிடங்கள் (70 சதவீதம்) நிரப்பப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மோகன் கூறியது: ''4 மாவட்டங்களிலும் வயர்மேன் நியமனம் தாமதத்தால் பணிச்சுமைக்கு ஆளாகி மின்விபத்தும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கிராமப்புறங்களில் போதிய வயர்மேன்கள் இன்றி மின்பராமரிப்பு பணி பாதித்து மக்கள் சிரம்மப்படுகின்றனர். பெருநகரம், நகரம், கிராமம் என்ற அடிப்படையில் மின்வாரியத்தில் போதிய வயர்மேன்கள் இன்றி அப்பகுதியிலுள்ள மின்கம்பம் ஏற தெரிந்த தனி நபர்களால் பீஸ் பழுது நீக்க டிரான்ஸ்பார்மர்களை தன்னிச்சையாக மின்சாரத்தை துண்டிக்கின்றனர்.
இவர்களுக்கு எவ்வித பணி பாதுகாப்பு இல்லை. இவர்களுக்கு ஏதேனும் மின்விபத்து ஏற்பட்டால் மின்கம்பத்தில் பிளக்ஸ் பேனர் மாட்டுவதற்கு ஏறியதாக கூறுகின்றனர். வயர்மேன் காலியிடத்தால் மின்பராமரிப்பு பணி பாதிப்பதுடன் பொதுமக்கள், விவசாயிகளும் பாதிக்கின்றனர். வயர்மேன்கள் பணியிடங்களை துரிதமாக நிரப்ப மின்வாரிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.