அண்ணா பல்கலை.யில் பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு


சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துயரமிகு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக வேந்தர் நேற்று மதியம் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு செய்யவும் மாணவர்களுடன் உரையாடவும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதிபடுத்தவும் பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

அப்போது, பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களை ஆளுநர் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்தார். பின்னர் ஆளுநர் மாணவர்களையும், மாணவிகளையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடினார். பல்கலைக்கழக வளாகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு மாணவ, மாணவிகள் தெரிவித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனே முக்கியமானது என்று சுட்டிக்காட்டியதோடு மாணவர்கள் எழுப்பிய பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்தவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x