புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் மீண்டும் துணைநிலை ஆளுநருடன் சந்திப்பு: அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 3 பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவு எம்எல்ஏ ஒருவரும் மீண்டும் துணைநிலை ஆளுநரை சனிக்கிழமை (டிச.28) நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது புதுச்சேரியின் வளர்ச்சி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாக தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர் உள்ளிட்டோர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களில் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சமீபத்தில் சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் அளித்தனர்.

தொடர்ந்து, பாஜக மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசினர். அவர்கள் சந்தித்த அன்றைய தினமே சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் பாஜக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் ஆகியோரும் துணைநிலை ஆளுநரை சந்தித்தனர். இதனால் புதுச்சேரி அரசியல் சூடுபிடித்தது.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் மற்றும் அக்கட்சியின் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ சிவசங்கர் ஆகியோர் இன்று மீண்டும் ராஜ்நிவாசில் துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசினர். சுமார் 40 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இது குறித்து பாஜக எம்எல்ஏக்களிடம் கேட்டபோது, இது வழக்கமான சந்திப்புதான், புதுச்சேரி அரசியல் நிலவரம், புதுச்சேரியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினோம் என்றனர். பாஜக ஆதரவு எம்எல்ஏ சிவசங்கரன் கூறும்போது, ஃபெஞ்சல் புயல் மழையால் புதுச்சேரியில் உள்ள வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் பெற்றுத்தர வேண்டும். ரூ.20 லட்சமாக இருக்கும் ஜிஎஸ்டி உச்சவரம்பை ரூ.40 லட்சமாக உயர்த்த வேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளேன் என்று தெரிவித்தார். புதுச்சேரியில் தனி அணியாக செயல்பட்டு வரும் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு எம்எம்எல்ஏ துணைநிலை ஆளுநரை மீண்டும் சந்தித்துள்ள சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x