நாகர்கோவில்: கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலம் 30-ம் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி பணிகளை நாளையுடன் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி கடல் நடுவே விவேகானந்தர் பாறை அருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. படகு மூலம் இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் பெரும்பாலான நாட்கள் ஏமாற்றமே அடைந்துள்ளனர். கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு போன்ற நாட்களில் விவேகானந்தர் பாறைக்கு மட்டுமே படகு போக்குவரத்து நடைபெறுகிறது.
எனவே விவேகானந்தர் பாறைக்கு சென்றாலே அங்கிருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் செல்லும் வகையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி கூண்டு இணைப்பு நடைபாலம் அமைக்கப்பட்டு வந்தது.
இந்த பாலத்தை 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி கண்ணாடி கூண்டு பாலப்பணிகள் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்றது. பாலத்தின் நடுவே கண்ணாடி தளம் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பாலத்தின் இறுதிகட்ட பணியை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று இரவு ஆய்வு செய்தார்.
அப்போது கண்ணாடி கூண்டு பாலத்தின் இறுதிகட்ட பணியை மேற்கொண்டு வரும் பொறியாளர் குழுவினரிடம் நாளை திறப்பு விழா இருப்பதால் பணியை நாளை (29ந் தேதி)_மாலைக்குள் எவ்வித தொய்வும் இன்றி துல்லியமாக முடிக்குமாறு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவிற்கான ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விழா நிகழ்ச்சிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மற்றும் துறை அதிகாரிகள் இருந்தனர்.