மதுரை: தமிழக அரசுக்கு பதிவுத்துறையில் ரூ.2,200 கோடியும், வணிகவரித்துறையில் ரூ.10,000 கோடியும் நடப்பாண்டில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை ஆலத்தூரில் இன்று பதிவுத்துறை மாநிலப்பணி மற்றும் அனைத்து அரசு அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் அதன் மாநிலத் தலைவர் ஆ.செந்தூர்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் ஆர்.உத்தமசிங் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் எம்.பாவேந்தன் வரவேற்றார்.
இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: தமிழக அரசுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலம் 87 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் பதிவுத்துறையில் ரூ.2,200 கோடியும், வணிகவரித்துறையில் ரூ.10,000 கோடியும் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் பதிவுத்துறையில் ரூ.24,000 கோடிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் இரு கண்களாக பார்க்கிறேன். வணிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வணிகவரித்துறையில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் பதவி உயர்வில் உள்ள பிரச்சினைகள் களையப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்படும். பதிவுத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து பணியிடை நீக்கமான 150 பணியாளர்கள் குறித்து விசாரித்து மீண்டும் பணி வழங்கப்படும். ஜனவரி மாத இறுதிக்குள் 38 உதவி பதிவுத்துறை தலைவர் பதவியிடங்கள் நிரப்பப்படும்.
விரைவில் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும். வணிகவரித்துறையில் 20 நாட்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதிவுத்துறையில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பதவி உயர்வு வழங்க இயலவில்லை. பதிவுத்துறையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பதவி உயர்வு வழங்கப்படும். பதிவுத்துறை அலுவலர்கள், ஆவண எழுத்தர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.
பதிவுத்துறை அலுவலர்கள் அவர்களாகவே பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் நான் பொறுப்பல்ல. பதிவுத்துறை அலுவலர்களுக்கு பணியில் பிரச்சினை என்றால் விட்டு கொடுக்க மாட்டேன். பதிவுத்துறை பணியாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் சங்கத்தின் சார்பில் அமைச்சர் பி.மூர்த்திக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இதில் மாநிலம் முழுவதுமிருந்து பதிவுத்துறை அலுவலர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.