புதுச்சேரி: இன்று நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்துள்ளது.
புதுச்சேரி பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்புப்பொதுக்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் – அன்புமணி இடையே வெடித்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமனம் செய்ததற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த சில மாதங்களே ஆனவருக்கு இளைஞரணி பதவி கொடுப்பதா என்று அன்புமணி கட்டமாக கேள்வி எழுப்பினார். இதற்கு ‘நான்தான் கட்சியை நிறுவினேன், நான்தான் முடிவெடுப்பேன்’ என ராமதாஸ் பதிலடி கொடுத்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “2026 சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலம் தேவை. அதற்காக அன்புமணிக்கு உதவுவதற்காக முகுந்தன் பரசுராமனை இளைஞர் சங்க தலைவராக நியமனம் செய்கிறேன்” என்றார். அப்போது அருகில் இருந்த அன்புமணி ராமதாஸ் குறுக்கிட்டு “எனக்கு உதவியாகவா? எனக்கு வேண்டாம்” எனக் கூறினார். 'உனக்கு வேண்டாம் என்றால் நீ போ. இது நான் ஆரம்பித்த கட்சி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். பரசுராமன் முகுந்தன் தான் இளைஞரணி தலைவர். இது என் கட்சி.. நான் ஆரம்பித்த கட்சி.. நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். உங்களுக்கு வேண்டாம் என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள்" என்றார். இந்த விவகாரம் பாமகவில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
அதனையடுத்து, “பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருக்கிறேன். என்னை அங்கே வந்து சந்திக்கலாம்” என்று சொல்லி தொலைபேசி எண்ணை மேடையிலேயே தெரிவித்தார். ராமதாஸின் சொந்த பேரன் தான் முகுந்தன் பரசுராமன். அன்புமணி ராமதாஸின் அக்காவான காந்திமதி - பரசுராமன் தம்பதியினரின் மகன் தான் முகுந்தன்.