எப்ஐஆர் கசிவை ஏற்க முடியாது; மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் அதிரடி


சென்னை: அண்ணா பல்கலை.யில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘
மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது ஏற்றுக் கொள்ள முடியாது.

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக மாநில அரசு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அவரிடம் தேர்வு கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை டிஜிபி அளிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் புகார் அளித்த மாணவியின் துணிச்சல் பாராட்டத்தக்கது. பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு பெண் தன் விருப்பப்படி ஏன் காதல் செய்யக்கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது?. ஒவ்வொரு ஆணும், பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

x