தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சிதான்: பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் நம்பிக்கை!


விழுப்புரம்: 2026 ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒருமுறை தப்பு செய்தால் மீண்டும் தப்பு செய்வோம் என்று அர்த்தம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் வானூர் அருகே பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்புப்பொதுக்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “ கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் கடந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து இருந்தால் 4 நாட்களுக்கு முன் நடத்திய தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி நம் பக்கம்.

2026 ம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒருமுறை தப்பு செய்தால் மீண்டும் தப்பு செய்வோம் என்று அர்த்தம் இல்லை. அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ முடிவு செய்வோம். அடுத்த ஆட்சியில் நாம் பங்கேற்போம். தமிழகம், புதுவையில் ஆட்சி அமைக்கப்போவது நம் கூட்டணிதான். இங்குள்ளவர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் இனி திமுக ஆட்சி வரக்கூடாது என சபதம் ஏற்போம்” என்றார்

x