சென்னை: மாசற்ற மனதுக்கு சொந்தக்காரர் என விஜயகாந்த் நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
தேமுதிக தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது .இதற்கான நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முதல் தவெக தலைவர் விஜய் வரையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தேமுதிக அழைப்பு விடுத்தது.
விஜயகாந்தின் நினைவு தினமான இன்று மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடத்த தேமுதிக அனுமதி கோரியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விஜயகாந்த் நினைவுநாள் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.