கரூரில் ரூ.13 கோடியில் இணைப்புச்சாலை: அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்!


கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று (டிச. 28) ரூ.13 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட இணைப்பு சாலை உள்ளிட்ட பல திட்டங்களை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து அச்சாலை வழியே செல்லும் முதல் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரூர் ஒன்றியம் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் ரூ.39.95 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கிராம செயலக கட்டிட திறப்பு விழா இன்று (டிச. 28) நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகி த்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி, கல்வெட்டினை திறந்து வைத்தார்.

எம்எல்ஏக்கள் ரா.மாணிக்கம் (குளித்தலை), ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா, கரூர் கோட்டாட்சியர் முகமதுபைசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்க நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்கள் அவரை பூத்தூவி வரவேற்றனர்.

கரூர் மாநகராட்சி 10வது வார்டு வெங்கமேடு என்எஸ்கே நகர் பகுதியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். தொடர்ந்து கரூர் வாங்கல் சாலையில் இருந்து காமதேனு நகர் வழியாக கரூர் செம்மடை சாலையை வெங்கமேடு பகுதியில் இணைக்கும் ரூ.13 கோடியில் அமைக்கப்பட்டு இணைப்பு சாலையை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து அச்சாலை வழியே செல்லும் முதல் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், ஆர்.எஸ்.ராஜா, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கரூர் மாநகராட்சி 13வது வார்டு சணப்பிரட்டியில் ரூ.25 லட்சத்தில் சுகாதார மைய கட்டிடம், 34வது வார்டு காமராஜ் சாலையில் ரூ.12 லட்சத்தில் அங்கன்வாடி மையம், 36வது வார்டு திருமாநிலையூரில் ரூ.36.30 லட்சத்தில் புதிய சமுதாய கழிப்பிடம், 42வது வார்டு தென்றல் நகரில் ரூ.16 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணியை தொடங்கி வைத்தார். 48வது வார்டு காளியப்பனூரில் ரூ.7.50 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம், வேலுசாமிபுரத்தில் புதிய முழுநேர ரேஷன் கடை திறப்பு நடைபெற்றது.

ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஜீவா நகரில் ரூ.7.85 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாக கட்டிடம், ஆண்டாங்கோவில் குடித்தெரு மயானத்தில் ரூ.10 லட்சத்தில் எரிமேடை, சுற்றுச்சுவர், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
கோவிந்தம்பாளையத்தில் ரூ.4.50 லட்சத்தில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மொச்சக்கொட்டம் பாளையத்தில் ரூ.15. லட்சத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, வேப்பம்பாளையம் காலனியில் ரூ.28.74 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூட கட்டிடம் மற்றும் ஆத்தூர் பிரிவில் புற காவல் நிலையம் ஆகியவற்றை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.

x