சென்னை: டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ‘தனது தொலைநோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்தவர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26-ம் தேதி இரவு டெல்லியில் காலமானார். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றார். அங்கு, மன்மோகன் சிங் இல்லத்தில் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியது: பொருளாதார நிபுணரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு, காங்கிரஸ் பேரியக்கத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக, சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் உட்பட தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், பல்வேறு திட்டங்களை உருவாக்கி தருவதற்கும் துணை நின்றவர் மன்மோகன் சிங். தமிழகத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் வந்ததற்கும் அவர்தான் காரணம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வரவும் காரணமாக இருந்தார்.
இடையிலேயே சேது சமுத்திர திட்டம் நின்றுவிட்டது. பல்வேறு திட்டங்கள் தமிழகத்துக்கு வர அவர்தான் காரணமாக இருந்திருக்கிறார்.
‘100 நாள் வேலை’ எனும் புரட்சிகரமான திட்டத்தை கொண்டுவந்து அறிமுகம் செய்தவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என்பது தமிழர்களின் பல ஆண்டு கால கனவாக இருந்தது. அதை சோனியா காந்தி துணையோடு அறிவித்து நிறைவேற்றி தந்தவர் மன்மோகன் சிங். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்புணர்வோடு பழகியவர். அவரது மறைவு வேதனைக்குரியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.
தொடர்ந்து, அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘இந்தியாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவரான மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதையை செலுத்தினேன். தனது தொலை நோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்தவர். தனது பணிவால் கோடிக்கணக்கானோருக்கு ஊக்கமூட்டியவர். அடுத்து வரும் தலைமுறைகளுக்கு எல்லாம் தனது வாழ்க்கையால் நம்பிக்கை, வளர்ச்சிக்கான கலங்கரை விளக்கமாக விளங்கும் அரிதினும் அரிதான தலைவர்களில் ஒருவராக வரலாறு அவரது பெயரை பொறித்து வைக்கும். இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.