சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை நூதன போராட்டம்


கோவை: திமுக அரசை கண்டித்து கோவையில் தனது வீட்டு முன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து நேற்று காலை போராட்டம் நடத்தினார்.

கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன் நேற்று காலை 10 மணியளவில் தொண்டர்கள் முன்னிலையில், திமுக அரசைக் கண்டித்து, தன்னைத்தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். அப்போது, பாஜக தொண்டர்கள் ‘வெற்றிவேல், வீரவேல்’ என்றும், ‘வேண்டாம், வேண்டாம், சாட்டையடி வேண்டாம்’ என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இது தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது. பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

முருகப் பெருமானிடம் இந்த ஆறு சாட்டையடி மூலம் ஒரு வேண்டுதல் வைத்துள்ளோம். நம் தமிழ் மண்ணில் உடலை வருத்தி இறைவனிடம் வைக்கப்படும் வேண்டுதலுக்கு ஒரு விளைவு இருக்கும் என்பது நம்பிக்கை. தெரிந்தோ தெரியாமலோ நாங்களே கூட ஏதேனும் தவறு செய்திருக்கலாம். அதற்குக்கூட இது தண்டனையாக இருக்கட்டும்.

நான் காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லப்பட்ட வழக்கை விசாரித்தேன். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்தேன். அப்போது அந்தச் சிறுமியின் தாய் என்னிடம் ‘குற்றவாளியை பிடித்துவிட்டீர்கள், என் மகளைத் திருப்பித் தருவீர்களா?’ என கேட்டார். அந்தக் கேள்வி என்னை அரசியலில் பயணிக்க வைத்தது.

காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை கசிய வாய்ப்பே இல்லை. முதல் தகவல் அறிக்கை பிரதி ஒரு நகல் நீதிமன்றத்துக்கும், ஒரு நகல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் மட்டுமே வழங்கப்படும். முதல் தகவல் அறிக்கையை யாரோ வேண்டுமென்றே பதிவிறக்கம் செய்து பரப்பியிருக்க வேண்டும். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை கசிய விட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் முதல்முறை செய்த குற்றத்துக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. திமுக ஆட்சி அகற்றப்படும் வரை நான் காலணியை அணியப் போவதில்லை. இந்த ஆட்சி தவறு செய்கிறது. அறவழியில் போராடக் கூட அனுமதியில்லை. எல்லாவற்றையும் கண்டித்தே நாங்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.

தேர்தல் வெற்றி, தோல்வி சகஜம். 2026 தேர்தலில் தோற்றாலும்கூட நான் கவலைப்பட மாட்டேன். நான் சாராயம் விற்ற பணத்திலும், கமிஷன் பணத்திலும் தேர்தலை எதிர்கொள்ளவில்லை. மாறாக விவசாய பின்னணி கொண்டு நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டேன். லண்டன் சென்று திரும்பிய பின் என் அரசியல் பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சமுக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் குறித்து எனக்கு கவலையில்லை.

நம் நாட்டுக்கு புதிய பொருளாதாரக் கொள்கையை வகுத்துத் தந்தவர் மன்மோகன் சிங். அவரது மறைவுக்காக பாஜக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவை ஒட்டி இன்று (நேற்று) நடைபெற இருந்த பாஜக போராட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x