மதுரை சிறை பொருட்கள் விற்பனை முறைகேடு வழக்கில்: கடலூர் சிறை எஸ்பி முன்ஜாமீன் மனு


கோப்புப்படம்

மதுரை: மதுரை சிறை பொருட்கள் விற்பனை மற்றும் கொள்முதல் முறைகேடு வழக்கில் கடலூர் சிறை எஸ்பி ஊர்மிளாவின் முன்ஜாமீன் மனுவுக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை சிறைக்கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.1.63 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக மதுரை சிறைத்துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடலூர் சிறைத்துறை எஸ்பி எம்.ஊர்மிளா, பாளையங்கோட்டை கூடுதல் எஸ்பி எஸ்.வசந்த கண்ணன், நிர்வாக அதிகாரி எம்.தியாகராஜன் மற்றும் சிறைக்கு பொருட்கள் விநியோகம் செய்த மதுரை ஜபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னை சீனிவாசன் மற்றும் வெங்கடேஸ்வரி, சென்னை சாந்தி, நெல்லை சங்கரசுப்பு மற்றும் தனலெட்சுமி ஆகிய 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஜன.6-க்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை மனுதாரரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

x