சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் மளிகை பொருட்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ”மதி” என்ற வணிக முத்திரையுடன் ஒரே மாதிரியான வண்ண உறையில் விற்பனை செய்திட அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (27.12.2024) சென்னை, நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் பல்வேறு மாநில மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் மளிகை பொருட்களை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் ”மதி” என்ற வணிக முத்திரையுடன் ஒரே மாதிரியான வண்ண உறையில் விற்பனை செய்திட அறிமுகப்படுத்தினார்.
ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைஞர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து சரஸ் (SARAS - Sale of Articles of Rural Artisans Society) எனப்படும் விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் ஆந்திரா மாநிலத்தின் அழகிய மரச் சிற்பங்கள், தெலுங்கானா மாநிலத்தின் கலம்காரி பைகள், கேரள மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், குஜராத் மாநிலத்தின் கைத்தறி ஆடைகள், பீகார் மாநிலத்தின் மதுபாணி ஓவியங்கள், மகாராஷ்ட்ரா மாநில கோண்ட் பழங்குடியினரின் வண்ண ஓவியங்கள், மற்றும் சணல் பைகள், மேற்கு வங்காளத்தின் செயற்கை பூ கைவினைப் பொருட்கள், பாண்டிச்சேரி மாநிலத்தின் மூலிகைப் பொருட்கள் மற்றும் சிறுதானிய உணவுகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கடலூர் முந்திரிப் பருப்பு, தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், கன்னியாகுமரி வாழைநார் பொருட்கள், நாமக்கல் கொல்லிமலை அரபுளி காபித்தூள், கரூர் கைத்தறி துண்டுகள், சிவகங்கை பாரம்பரிய அரிசி வகைகள், திருவண்ணாமலை ஜவ்வாது மலை தேன், சிறுதானியங்கள், தூத்துக்குடி பனை பொருட்கள், பனை வெல்லம் (கருப்பட்டி), விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், அலங்கார விளக்கு திரைகள், விருதுநகர் செட்டிநாடு புடவைகள், அரியலூர் முந்திரி பருப்பு, கோயமுத்தூர் மூலிகை சோப்புகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள், மற்றும் திருநெல்வேலி அல்வா போன்ற பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியில் பாரம்பரிய சுவை மிகுந்த உணவுப் பொருட்கள் மற்றும் தமிழ்நாட்டின் கிராமிய சுவை நிறைந்த உணவுப் பொருட்களையும் விற்பனை செய்திட 10 அரங்குகள் உள்பட மொத்தம் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
2024 டிசம்பர் 27ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 09 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இலவசமாக வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இ.பரந்தாமன், திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், திரு.ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., உள்பட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.