சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைக் கண்டித்தும்; சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அதிமுக சார்பில் இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டு, டிசம்பர் 30ம் தேதி திங்கள் கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த டிசம்பர் 23ம் தேதி அன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், ”பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து”, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் காலமானதையொட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள், வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்கள் நீங்கலாக, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்; மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும்.
திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பெண்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.