ஜனநாயக ரீதியாக போராட முயன்ற எங்கள் மீது பொய் வழக்கா? - ஜெயக்குமார் கண்டனம்


சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு திமுகவை சேர்ந்த ஞானசேகரனால் வளாகத்தின் உள்ளேயே நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட முயன்ற எங்கள் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘பாசிச திமுக அரசின்‌ பொய் வழக்குகளுக்கு அஞ்ச மாட்டோம்!
2022-ம்‌ ஆண்டு மாநகராட்சி தேர்தலின் போது சட்டவிரோத மது விற்பனை செய்யும் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளியும், திமுக நிர்வாகியுமான நரேஷ் வாக்குச்சாவடிக்குள் புகுந்து கள்ள ஓட்டு போட முயன்ற போது அவனை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்ததற்காக என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது இந்த பாசிச திமுக அரசு.

தற்போது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு திமுகவை சேர்ந்த ஞானசேகரனால் வளாகத்தின் உள்ளேயே நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஜனநாயக ரீதியாக போராட முயன்ற எங்கள் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கா?

குற்றவாளிகளிடம் தனது சர்வாதிகாரத்தையும் - இரும்புக் கரத்தையும் காட்ட இயலாது, என் மீதும் கழக தோழர்கள் மீதும் பொய் வழக்கு போட நிர்வாக திறனற்ற திமுக அரசின் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீங்கள் போடும் பொய் வழக்குகள்! அள்ளி வீசும் அவதூறுகள்! ஏவி விடும் அடக்கு முறைகள்! இவை மட்டும் இல்லை! இதற்கு இன்னும் அதிகமாகவே, காலம் உங்களுக்கு திருப்பி தர காத்திருக்கிறது!' எனத் தெரிவித்துள்ளார்.

x