‘தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தந்தவர்’- மன்மோகன் சிங்கை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்த முதல்வர் ஸ்டாலின்!


முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

புதுடெல்லி: மெட்ரோ ரயில் திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான் காரணமாக இருந்திருக்கிறார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”புதுடெல்லியில் உடல்நலக் குறைவால் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் இல்லத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (27.12.2024) நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பொருளாதார நிபுணர் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இழப்பானது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பாகும். குறிப்பாக தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் துணை நின்றிருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலே சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் சரி, அதேபோல் 100 நாட்கள் வேலைத் திட்டம் என்கின்ற ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர் டாக்டர் மன்மோகன் சிங்.

எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களுடைய பல ஆண்டு கால கனவாக இருந்து வந்த தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை சோனியா காந்தியின் துணையோடு அறிவித்து நிறைவேற்றித் தந்தவர் மன்மோகன் சிங். கருணாநிதியோடு நெருங்கி நட்புணர்வோடு பழகக்கூடியவராக இருந்தவர். அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனைக்குரிய ஒன்று. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி - பத்து ஆண்டுகள் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகமும் அந்த கூட்டணியில் இருந்தது. தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நன்மையாக இருந்தது.

முதல்வர் பதில் – இன்றைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவர் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்ததற்கும் அவர் தான் காரணம். அதேபோல், சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வருவதற்கும் அவர் தான் காரணமாக இருந்தார். ஆனால் இடையிலே அத்திட்டம் நின்றுவிட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவற்கு அவர் தான் காரணமாக இருந்திருக்கிறார்’ என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

x