புதுச்சேரி: மின்துறையா- முதியோர் இல்லமா என கோஷம் எழுப்பி தொடர்ந்து ஓய்வு பெற்றவர்களை மின்துறையில் பணியில் அமர்த்துவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுவை மின்துறை தலைமை அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுவை மாநில தலைவர் கௌசிகன் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், மாநில செயலாளர் சஞ்சைசேகரன், பொருளாளர் ரஞ்சித்குமார் கண்டன உரையாற்றினர். மாநில குழு உறுப்பினர் ஜெயராஜ் நன்றி கூறினார்.
புதுவை மின்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களை பணியமர்த்தக் கூடாது. படித்து முடித்த தகுதியான இளைஞர்களை நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும். மின்துறை தனியார்மயம் என்ற முடிவை முழுவதுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மின்துறையா- முதியோர் இல்லமா என கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், "புதுச்சேரியில் படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிந்து காத்திருப்பவர்கள் சுமார் 3.5 லட்சம் பேர் உள்ளனர். நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு துறைகளில் சுமார் 60 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளது. குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது இளைஞர்களுக்கு பணி தராமல் ஓய்வு பெற்றவர்களை தொடர்ந்து பணியில் மின்துறையில் அமர்த்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்" என்றனர்.