புதுச்சேரி: கிஸ்தி கட்டாததால் ஏலம் விட நடவடிக்கை எடுத்ததால் புதுச்சேரி கலால்துறை முன்பு விஷம் குடிக்க சாராயக்கடை உரிமையாளர் இன்று முயன்றார். விஷ பாட்டிலை பறிக்க முயன்றபோது போலீஸாருக்கும் கடை உரிமையாளருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி கரையாம்புத்துாரைச் சேர்ந்தவர் ஜெனார்த்தனன். இவர் கரையாம்புத்துார், ஆராய்ச்சிக்குப்பம், கல்மண்டபம், பெரிய வீராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் சாராயக்கடை வைத்துள்ளார். சாராயக் கடைக்கு மாத கிஸ்தியை கட்டாத சாராயக் கடைகளை கலால்துறை மீண்டும் ஏலம் விட்டது. ஜெனார்த்தனன் பெஞ்சல் புயல் பாதிப்பால் கிஸ்தி தொகையை செலுத்தாமல் இருந்தார். கலால்துறை ஏலம் விட அறிவிப்பு வெளியிட்டது. கடையை ஏலம் எடுத்த போது முன் வைப்பு தொகை செலுத்தி உள்ளோம். புயலால் கடைகள் சேதமடைந்துள்ளது.
இந்நேரத்தில் கடையை ஏலம் விட்டால் தனது வாழ்வாதாரம் பாதிக்கும் என ஜெனார்த்தனன் கலால் துறையிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் கலால்துறை துணை ஆணையர் சட்டப்படி சாராயக் கடையை ஏலம் விடுவதாக தெரிவித்தார். இதையடுத்து புதுவை கலால்துறை முன்பு ஜெனார்த்தனன் விஷம் குடித்து உயிர் விடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
கலால்துறைக்கு அவர் விஷ பாட்டிலுடன் இன்று வந்தார். தகவலறிந்த மற்ற கடை வியாபாரிகளும், போலீஸாரும் அங்கு வந்தனர். போலீசார் விஷ பாட்டிலை பறிக்க முயன்றதால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. போலீசார் விஷ பாட்டிலை பறித்தனர். மற்ற வியாபாரிகள் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
போராட்டம் நடத்திய ஜனார்த்தன் கூறுகையில், ”நான்கு இடங்களில் கடை வைத்துள்ளேன். இதுவரை ரூ.1.75 கோடி பணம் கட்டியுள்ளேன். இன்னும் ஐந்து மாதங்களில் ரூ.1.25 கோடி கட்ட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ரூ.2 கோடி பத்திரம் தந்துள்ளேன். கலால்துறை துணை ஆணையர், 20 சதவீத ஏலத்தை குறைந்த விலைக்கு மறு ஏலம் விடுகிறார். இது தவறான போக்கு. இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது. லாபத்தில் கடையை நடத்தும்போதே இவ்வாறு தவறாக செய்கிறார்- உயிர்வாழ விரும்பாமல் போராட்டம் நடத்தினேன்” என்று ஜனார்த்தன் கூறினார்.