சுனாமியால் உயிரிழந்தோரின் 20-ம் ஆண்டு நினைவு தினம்: மவுன ஊர்வலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு


சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சுனாமியில் உயிர் நீ்த்தோருக்கு சென்னை மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம் பின்புறம் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். உடன் மீனவர் பேரவை தலைவர் அன்பழகன், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்.

சென்னை: சுனாமியால் உயிரிழந்தோரின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையின் பல்வேறு கடற்கரைகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 14 நாடுகளைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் சுனாமி பாதிப்புக்குள்ளான இடங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் மெரினா லூப் சாலையில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் சுனாமியால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பொதுமக்களுடன் மவுன ஊர்வலத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் இரா.அன்பழகனார், தமாகா பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் இரா.அன்பழகனார் கூறும்போது, "எங்களுடைய சோகம் இன்னும் தீரவில்லை.

சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,
மீனவ மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர் சென்னை
மெரினா கடலில் நேற்று மலர்கள் தூவியும்,
பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.படங்கள்: ம.பிரபு

உலக வரலாற்றில் வயிற்று பிழைப்புக்காக செல்லும் மீனவன் கொல்லப்படும் நிலை தமிழகத்தில் தான் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய வாழ்க்கை மேம்படுவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்" என்றார்.

திருவொற்றியூர் கே.வி.குப்பத்தில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர், கே.பி.சங்கர் எம்எல்ஏ, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

காசிமேடு கடற்கரையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாஜக சார்பில் நடுக்குப்பத்தில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் சதீஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் நமீதா உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மீனவ குழந்தைகளுக்கு தவணை தொகையை செலுத்தியதுடன், 500 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அமமுக துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் சென்னையின் பல்வேறு கடற்கரைகளில் கட்சிகள், அமைப்புகள், மீனவ சங்கங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சுனாமியால் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதற்கிடைேய, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளி்ட்டோரும் அறிக்கை வாயிலாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

x