சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி. வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் ஆணையர் அருண் நேற்று கூறியதாவது: கடந்த 24-ம் தேதி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பின் பேரில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்ற போலீஸார், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பேராசிரியர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை அப்படியே பதிவு செய்வதுதான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்). அதில் காவல்துறை எந்த திருத்தமும், அழித்தலும் செய்யக்கூடாது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 25-ம் தேதி காலையிலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர்தான் குற்றத்தை செய்தாரா என்பதை உறுதி செய்ய பல்வேறு விசாரணை நடத்தி, உறுதி செய்த பிறகு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் மீது புதிதாக கொண்டு வரப்பட்ட பிஎன்எஸ் சட்டத்தின் 6 பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போது, சிசிடிஎன்எஸ் (குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள அமைப்பு) தானாகவே லாக் ஆகிவிடும். சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த எஃப்ஐஆர் லாக் ஆவதில் தாமதமாகி உள்ளது. அந்த நேரத்தை பயன்படுத்தி ஒரு சிலர் அந்த எஃப்ஐஆர்-ஐ பதிவிறக்கம் செய்திருக்கலாம். மேலும், புகார்தாரருக்கும் ஒரு எஃப்ஐஆர் நகல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வழிகளில்தான் எஃப்ஐஆர் வெளியே வந்திருக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் எஃப்ஐஆரை வெளியே பகிரக்கூடாது. அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம். அதுமட்டுமில்லாமல், அந்த எஃப்ஐஆர்-ஐ எடுத்து வைத்துக்கொண்டு பொது வெளியில் விவாதம் செய்வதும் குற்றம்தான். எனவே, எஃப்ஐஆர் வெளியே கசிந்ததற்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்ஐஆரை கசியவிட்ட நபர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.
இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் மட்டும்தான் குற்றவாளி. வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லை. அவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டபோது, தனது செல்போனை அணைத்து வைத்துள்ளார். ஞானசேகரன் மீது 2013-ல் இருந்து இதுவரை 20 வழக்குகள் உள்ளன. அனைத்தும் திருட்டு வழக்குகள்தான். இவர் மீது ரவுடித் தனம் செய்ததாகவோ, வேறு ஏதேனும் பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாகவோ வழக்கு இல்லை. இவரால் வேறு பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு புகார் ஏதும் வரவில்லை. ஆனால், அவரை போலீஸ் காவலில் விசாரிக்கும்போது பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பெண்களை அணுகி புகார் பெறப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதில் 56 கேமராக்கள் செயல்படுகின்றன. அந்த கேமராக்களை ஆய்வு செய்தபோது, பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. பல்கலைக்கழகத்தில் 140 பாதுகாவலர்கள் இருக்கின்றனர். அவர்கள் 49 பேர் வீதம் 3 ஷிப்டுகளாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அங்கு பாதுகாப்பை அதிகரிக்க ஆய்வு நடத்தி வருகிறோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை, மாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் சந்தேக நபர்களை மட்டும் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரணை செய்கின்றனர். 2014-ம் ஆண்டு போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வந்த முக்கிய நபராக ஞானசேகரன் இருந்தார்.
2019-ம் ஆண்டு இறுதியாக அவர் மீது ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் மீது வழக்கு இல்லை. 2023-ல் ‘பெட் கிளினிக்’ ஒன்றில் தகராறு செய்தது தொடர்பாக அவர் மீது ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்தவகையில் 2019-க்கு பிறகு ஞானசேகரன் மீது குற்ற வழக்குகள் இல்லை. குற்றவாளி எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, காவல் துறையை நம்பி, அந்த மாணவி, மறுநாளே போலீஸில் புகார் அளித்துள்ளார். அவரது நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையில் புகார்தாரர் திருப்தி அடைந்திருக்கிறார்.
எந்த ஒரு குற்றம் நடந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகி புகார் கொடுக்க வேண்டும். அவர்களது புகார் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் விரைவில் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்றுக் கொடுப்போம் இவ்வாறு காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் அளிக்காத நிலையில், பொறியியல் மாணவி மட்டும் துணிச்சலாக புகார் தெரிவித்துள்ளார். அவருக்கு காவல் ஆணையர் அருண் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
ஞானசேகரனுக்கு 3 மனைவிகள்: கைதான ஞானசேகரனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஞானசேகரனுக்கு 3 மனைவிகள். முதல் மனைவிக்கு 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஞானசேகரனின் பாலியல் கொடுமை தாங்காமல் அவர் பிரிந்து சென்றுள்ளார். இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தையும் 3-வது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளதாம். அவர்களும் பிரிந்து சென்றுவிட்டார்களாம். இவர்களில் ஒருவர் தாசில்தாரின் மகள்.
தற்போது மாணவி உட்பட மேலும் 3 பெண்களிடம் அவர் பாலியல் ரீதியில் எல்லை மீறி உள்ளதாக கூறுப்படுகிறது. ஆனால், மாணவி தவிர வேறு யாரும் அவர் மீது புகார் தெரிவிக்கவில்லை. இதனால், அவர் இதுபோன்ற செயல்களில் துணிச்சலுடன் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அவரது பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.