மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை


அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த கொடூரமான சம்பவத்துக்கு ஆணையம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், நீதி கேட்டு போராடும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆணையம் துணை நிற்கும் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

கைதானவர் தொடர் குற்றவாளி எனும் நிலையில், அவர் மீதான முந்தைய வழக்குகளில் காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்பதை குறிப்பிட விரும்புகிறோம். இந்த அலட்சியமே அவரை தொடர்ந்து குற்றம் செய்வதற்கான துணிச்சலை கொடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவதற்கான நிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தமிழக டிஜிபிக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு இலவச மருத்துவ சேவை, பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்க வேண்டும். தொடர் குற்றவாளிக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை அளிக்க வகை செய்யும் பிஎன்எஸ் 71-வது பிரிவையும் முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை சேர்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பாதிப்புக்குள்ளான மாணவி குறித்த விவரங்களை பொதுவெளியில் வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x