“தவெகவுடன் கூட்டணி என இப்போது ஜோசியம் சொல்ல முடியாது” - திண்டுக்கல் சீனிவாசன் பதில்


திண்டுக்கல்லில் நடந்த அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன். அருகில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார்.

திண்டுக்கல்: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் எங்களது பொதுச்செயலாளர் அறிவிப்பார். தவெக வுடன் கூட்டணி என இப்போது ஜோசியம் சொல்லமுடியாது என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உறுப்பினர் படிவங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகார் குற்றவாளியாக கூறப்படும் நபர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருப்பது போல் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது 15 வழக்குகள் உள்ளது எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கே கிடையாது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. காவல்துறையில் உண்மையான செயல்பாடுகள் எதுவும் கிடையாது. உதாரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட கேவலம், தினந்தோறும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் எங்களது பொதுச்செயலாளர் அறிவிப்பார். அரசியல் செய்வதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உள்ளது. விஜய் அவரது ஸ்டைலில் அரசியல் செய்கிறார். வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார் என்பதை விமர்சிக்க முடியாது. தவெக வுடன் கூட்டணி என எந்த ஜோசியமும் சொல்ல முடியாது. வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அருமையாக சண்டை போட்டு வருகிறார், பதில் சொல்ல வேண்டியது தமிழக முதல்வர் தான்'' என்றார்.


x