நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குமரி முனையில் கூடி அய்யன் திருவள்ளுவரின் புகழை பறைசாற்ற உள்ளார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிக்கான விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சரும், குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது; ”அய்யன் திருவள்ளுவர் சிலையை முத்தமிழ் அறிஞர் கருணாநிதி தென்குமரி முனையில் நிறுவி 25 ஆண்டுகள் நிறைந்துள்ளது. அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வருகின்ற டிசம்பர் 30, 31 ம் தேதிகளில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. விழா சிறப்பாக நடைபெறும் வகையில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. முதல்வர் 30ம் தேதி மாலை இங்கு வருகை புரிந்து திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டு, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையினை இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை திறந்து வைத்து, திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார்.
மேலும் நம்முடைய அய்யன் திருவள்ளுவரை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்வுகளான பட்டிமன்றங்கள், கருத்தரங்கள் மற்றம் கலை நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அனைத்து துறைகளும் இணைந்து இப்பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகிறார்கள். வெள்ளி விழா நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குமரி முனையில் கூடி அய்யன் திருவள்ளுவரின் புகழை பறைசாற்ற உள்ளனர். வெள்ளி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் வகையில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.
அதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதி நவீன மின்னணு வாகன திருவள்ளுவர் கலை பிராச்சார வாகனத்தினை கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து காந்தி நினைவு மண்டபம் வளாகத்தில் சீரமைக்கப்பட்டுள்ள பூங்காவினையும், சுனாமி நினைவு பூங்காவினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நெடுஞ்சாலைத் துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தின் தரைத்தள இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எஸ்பி சுந்தரவதனம், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா (பொது), செந்தில் வேல் முருகன் (நிலம்) நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.