சென்னை: அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டிசம்பர் 28 சென்னை-வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என அம்பேத்கர் பெயரைச் சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது’ என்று அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசினார். இதனால் நாடு எங்கும் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஒருவார காலத்துக்கும் மேலாக அனைத்து மாவட்டங்களிலும் ரயில் மறியல் போராட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய அளவில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஏராளமான தலித் அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானித்து அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல இடதுசாரிக் கட்சிகள் டிசம்பர் 30ம் தேதி இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென முடிவு செய்துள்ளன.
இத்தனை போராட்டங்கள் எதிர்ப்புகளுக்குப் பின்னரும் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அதனை நியாயப்படுத்தி வருகிறார். அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆளும் பாஜக உறுப்பினர்களும்கூட புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை எண்ணற்ற முறை உச்சரித்தனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது ‘தேசத் தந்தை’ காந்தியடிகள் குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியாதோ, அப்படித்தான் அரசமைப்புச் சட்டம் குறித்துப் பேசும்போது ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை’ புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை உச்சரிக்காமல் இருக்க முடியாது.
இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்திலும் எவ்வகையிலும் பங்கேற்காதவர்கள் சனாதன- சமூகப் பிரிவினைவாதிகள் ஆவர். அதனால் தான் மகாத்மா காந்தியடிகளின் பெயரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரும் சனாதன சக்திகளுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் சுமார் 25 கோடிக்கும் மேலான மக்கள் புரட்சியாளர் அம்பேத்கரைத் தமது குலதெய்வமாகக் கருதிப் போற்றுகின்றனர். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டு இருப்பதும் புரட்சியாளர் அம்பேத்கருக்குத் தான்.
இந்தியாவைப் போல ஜனநாயக அரசியல் முறையை ஏற்றுக்கொண்ட பல நாடுகள் இன்று துண்டு துண்டாகிச் சிதறுண்டு போய்விட்டன. ஆனால் சனாதன- சமூகப் பிரிவினை வாதிகளின் சதிகளையும் மீறி இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்றால் அதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்துத் தந்த அரசமைப்புச் சட்டமே அடிப்படையாகும்.
1950ம் ஆண்டிலிருந்தே அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்ளாத சனாதன சக்திகள்- சமூகப் பிரிவினைவாதிகள் அதனை மாற்றுவதற்கு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முயற்சி செய்தார்கள். அப்போது எழுந்த எதிர்ப்பின் காரணமாக அதைக் கைவிட்டார்கள். இப்போதும் அவர்களது ‘இந்து ராச்சிய’ கனவை நனவாக்குவதற்கு மிகப்பெரும் தடையாக இருப்பது அரசமைப்புச் சட்டம் தான். அதனால் அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இப்போது அவர்கள் இறங்கி உள்ளனர். ஒருபுறம், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பலவீனப்படுத்தும் விதமாக சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவது. இன்னொருபுறம் நீதித்துறையைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத்துக்கு புதிய விளக்கங்களைத் தந்து அதை நீர்த்துப் போகச் செய்வது என்ற இரு முனைத் தாக்குதல் இப்போது சனாதன சக்திகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் இந்தியா கூட்டணி கட்சிகள் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று முழங்குவதோடு, புரட்சியாளர் அம்பேத்கரையும் உயர்த்திப் பிடிக்கின்றன. இது இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. அதன் காரணமாகத் தான் கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் கொண்ட சனாதனப் பிரிவினை வாதிகள் அம்பேத்கரை இழிவு படுத்தும் வேலையில் இறங்கியுள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடு தான் அமித்ஷாவின் பேச்சாகும்.
புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அரசமைப்புச் சட்டம் என்னும் அடித்தளத்தை அமைத்துத் தந்த மாபெரும் தலைவர். அவரை இழிவு படுத்துவது அரசமைப்புச் சட்டத்தை இழிவு படுத்துவதற்குச் சமம். புரட்சியாளர் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டிசம்பர் 28 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் சென்னை- வள்ளுவர் கோட்டம் அருகில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.