ரெய்டு நடந்த 5வது நாளில் லாட்டரி மார்ட்டினிடம் ரூ.100 கோடி பெற்றுள்ளது பாஜக: செல்வப்பெருந்தகை பகீர்!


சென்னை: அமலாக்கத் துறையின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற லாட்டரி தொழில் நடத்துகிற மார்ட்டினின் நிறுவனத்தில் சோதனை நடத்திய ஐந்தாவது நாளில், அந்நிறுவனத்திடமிருந்து பாஜக ரூபாய் 100 கோடி நன்கொடையைப் பெற்றுள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 2017ம் ஆண்டு பாஜக-வின் நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து 2018 முதல் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நன்கொடை அளிப்பவர்களின் பெயர், எவ்வளவு நிதி, எந்த கட்சிக்கு வழங்கப்பட்டது என்கிற விவரத்தை வெளியிடாமல் இருக்க பாதுகாப்பு வழங்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகக் கூட இது குறித்து எந்த தகவலும் பெற முடியாத வகையில் தடை செய்யப்பட்டது. இதை தேர்தல் மீது நேர்மையான, நம்பிக்கையுள்ள ஜனநாயக சக்திகள் அனைத்தும் கடுமையாக எதிர்த்து வந்தன.

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தல் பத்திரம் மூலமாக ரூபாய் 6500 கோடிக்கு மேல் நன்கொடையாக பெற்று பாஜக தனது நிதியை பெருக்கிக் கொண்டது. ஆனால், மற்ற அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை அளிக்க முன்வராததில் வியப்பொன்றும் இல்லை. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த பிப்ரவரி 2024ல் அளித்த தீர்ப்பில் தேர்தல் பத்திர நன்கொடை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தீர்ப்பு கூறி அத்திட்டத்தை ரத்து செய்தது. ஆனால், அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டாலும் பாஜக இன்றைக்கும் பெருமளவில் நன்கொடை மூலமாக நிதி பெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியான தகவலின்படி, பாஜக நேரடியாக ரூபாய் 2,244 கோடி நன்கொடையை 2023-24ம் ஆண்டு பெற்றிருக்கிறது. கடந்த 2022-23 இல் தேர்தல் பத்திர நன்கொடை மூலம் பெற்றதை விட 212 சதவிகிதம் அதிகமான நிதியை பாஜக பெற்றிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத் துறையை பயன்படுத்தி தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதியை நேரடியாக பெற்றிருப்பதை இந்த தகவல் உறுதிப்படுத்துகிறது.

சமீபகாலமாக, அமலாக்கத் துறையின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற லாட்டரி தொழில் நடத்துகிற மார்ட்டினுக்கு தொடர்புடைய பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனத்தில் சோதனை நடத்திய ஐந்தாவது நாளில், அந்நிறுவனத்திடம் இருந்து பாஜக ரூபாய் 100 கோடி நன்கொடையைப் பெற்றுள்ளது. இத்தகைய பாஜகவின் ஊழல் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமாகியுள்ள நிலையில் தான் தொடர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்படுகிற சலுகைகளின் காரணமாக அந்நிறுவனங்கள், பாஜக-வுக்கு நன்கொடையை வாரி வழங்கி வருகின்றன. உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்திருந்தாலும் பாஜக நிதி பெறுவதற்கு எந்த தடையும் இல்லாமல் நிதிகளை குவித்து வருகிறது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்தது என்ற குற்றச்சாட்டையொட்டி, தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பெருமளவு நிதியைப் பெற்று வருவதால், தேர்தல் களம் சமநிலைத் தன்மையை இழந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லை. எனவே, பாஜக குவித்து வருகிற நிதி இந்திய ஜனநாயகத்திற்கு, குறிப்பாக, தேர்தல் களத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் பாதிப்பாக அமைகிற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்வது இந்தியாவின் ஜனநாயகத்திற்கே பெரும் ஆபத்தாக முடியும் என எச்சரிக்க விரும்புகிறேன்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

x