ரேஷனில் இலவச அரிசி 15 நாட்களில் விநியோகம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரி: ரேஷனில் இலவச அரிசி 15 நாட்களில் மஞ்சள் அட்டைக்கு பத்து கிலோவும், சிவப்பு அட்டைக்கு 20 கிலோவும் தரப்படவுள்ளது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா இன்று நடந்தது. விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், "மறுபடியும் இலவச அரிசி மஞ்சள் அட்டைக்கு பத்து கிலோ, சிவப்பு அட்டைக்கு 20 கிலோ 15 நாட்களில் ரேஷன் கடைகள் மூலம் தரப்படும். சப்ளை ஆர்டர் இந்த வாரம் தரப்படவுள்ளது. மக்களின் கோரிக்கையால் ரேஷன் கடைகளை அரசு திறந்துள்ளது. மேலும் பல பொருட்களை வழங்குவதும் அரசு எண்ணமாகும். நுகர்வோர் தினவிழாவை பொது இடத்தில் நடத்தியிருக்க வேண்டும். சாலையில் செல்வோரும் அறிந்திருக்க முடியும்.

இனி மேலும் பள்ளி குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளை வாங்குவோர் அனைவரும் நுகர்வோர் தான். நாம் ஒவ்வொருவருமே நுகர்வோர் என்பதால் விழிப்புணர்வு அவசியம் தேவை. தேவையான நிதி விழிப்புணர்வு நிகழ்வு, சட்ட பணிகளுக்கு என அனைத்துக்கும் ஒதுக்கப்படும்" என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

x