புதுச்சேரி: புதுச்சேரியில் பத்து சதவீத இடஒதுக்கீடு தரக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 2010ம் ஆண்டு முதல் மீனவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 2 சதவீத தனி ஒதுக்கீடு, 20 சதவீத எம்பிசியில் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மீனவ மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடை அதிகரித்து வழங்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறைந்தபட்சம் 10 சதவீதம் மீனவர்களுக்கு அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுனாமி நினைவுதினமான இன்று 10 சதவீதமாக ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கக்கோரி, அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் புதுவை தலைமைச் செயலகம் எதிரில் உள்ள கடலில் இறங்கி மனிதசங்கிலி போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களோடு போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.