சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பல்கலை. அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சாலை தடுப்பு மீது ஏறி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது: ஞானசேகர் என்பவர் மீது பதினைந்து வழக்குகள் உள்ளது அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியிட வேண்டும். தலைமறைவாக இருப்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், விருகை ரவி, கே.பி.கந்தன், ராஜேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.