சென்னை: பல்லாண்டுகள் வாழ்ந்து இளைஞர்களை வழி நடத்தி அவர்களோடு துணை நிற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லகண்ணு பிறந்தநாள் விழாவில் அவரிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இக்கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் நூற்றாண்டு தொடக்க விழா தியாகராய நகரில் உள்ள கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நல்லகண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி நூல்கள் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு. இன்று அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. வரும் 29-ம் தேதி அவரது நூற்றாண்டு விழா கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் விழாவில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்று வாழ்த்த உள்ளனர். இதற்காக பழ.நெடுமாறன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய நாளும் இன்று தான். நல்லகண்ணு பிறந்த நாளும் இன்று தான். இத்தகைய அரிய வாய்ப்பை பெற்ற நல்லகண்ணுவை நான் வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்திருக்கிறேன். சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபட்டவர் நல்லகண்ணு. அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து இளைஞர்களை வழி நடத்தி அவர்களோடு துணை நிற்க வேண்டும். இந்த மதச்சார்பற்ற கூட்டணியின் பலத்தை பார்க்கும் போது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 2026 தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல, நிரந்தர கூட்டணியாகவும் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இறுதியாக பேசிய நல்லகண்ணு, எல்லோரும் ஒன்றிணைந்து போராடி இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றோம். இந்த சுதந்திரம் நீடிக்க வேண்டுமென்றால் சமத்துவமும், சகோதரத்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என அம்பேத்கர் தெரிவித்துள்ளார். அவர் வழியில் நாம் பாதுகாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் முடிவில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்பினர் நல்ல கண்ணுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லெனிமிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆசைத்தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் இ.ஆர்.ஈஸ்வரன், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ நெடுமாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் எம்பி அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.