மானாமதுரை அருகே கண்மாய் கரையை உடைத்த மர்ம நபர்கள்: தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் கிராம மக்கள் அதிர்ச்சி


ஏ.நெடுங்குளம் கண்மாயில் உடைக்கப்பட்ட கரை.

மானாமதுரை: மானாமதுரை அருகே கண்மாய் கரையை மர்ம நபர்கள் உடைத்ததில் தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலை ஊராட்சி ஏ.நெடுங்குளத்தில் பொதுப்பணித்துறை காட்டுப்பாட்டில் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் மூலம் 350 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. கண்மாய் முழுமையாக நிரம்பிய நிலையில், விவசாயப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் கண்மாய் கரையை மண் இயந்திரம் மூலம் வெட்டி விட்டனர். இதனால் தண்ணீர் முழுவதும் ஓடை வழியாக வெளியேறியது. இதனை காலையில் அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியுடனும், கவலையுடனும் கண்மாயில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ”கண்மாய் கரையை உடைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாயில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் பாதிக்கப்படும். இதனால் அதற்குரிய இழப்பீடு பெற்று தர வேண்டும்” என்றனர்.

x