அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக கோவை சத்யன் நியமனம்


அதிமுக மாநில நிர்வாகிகள் 4 பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநில நிர்வாகிகள் 4 பேருக்கு புதிய பொறுப்புகளை பழனிசாமி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ஆர்.விஜயகுமார், துணை செயலாளர் கோவிலம்பாக்கம் சி.மணிமாறன், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், இணை செயலாளர் எம்.கோவை சத்யன் ஆகியோர் இன்றுமுதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

கட்சியின் மாணவரணி புதிய செயலாளராக சிங்கை ராமச்சந்திரன், கொள்கை பரப்பு துணைச் செயலாளராக எஸ்.ஆர்.விஜயகுமார், ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராக கோவிலம்பாக்கம் மணிமாறன், தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக கோவை சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.

x