புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலைகள் சதுக்கம் இடையிலான உயர்மட்ட மேம்பாலம் வரும் 2025ல் மார்ச்சுக்குள் தொடங்குகிறது. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு அதிகாரிகள் புதுச்சேரியில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் உள்ளூர் மக்களின் வாகன எண்ணிக்கை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருப்பதை அடுத்து அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி ஈரடுக்கு பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது அதை ஒரே உயர்மட்ட மேம்பாலமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான கோரிக்கையை புதுவை பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சமீபத்தில் புதுடெல்லி சென்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரைச் சந்தித்து விளக்கினார். அமைச்சரின் நடவடிக்கையை அடுத்து மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு முதன்மைப் பொறியாளர் ஸ்ரீ சஞ்சய் கர்க் மற்றும் அதன் சென்னை கிளை தலைமைப் பொறியாளர் பி.ஆர்.மீனா ஆகியோர் புதுச்சேரிக்கு நேற்று வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ராஜீவ்காந்தி சிலை சதுக்கப் பகுதியில் தனியார் விடுதியில் அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்த குழுவினர் மேம்பால வரைபடத்தை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் ராஜீவ்காந்தி சிலை சதுக்கப் பகுதியை நேரில் பார்வையிட்டு போக்குவரத்து நெரிசலை கண்டனர். பின்னர், அங்கு பாலம் அமைக்கப்படும் இடங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து மத்திய முதன்மைப் பொறியாளர் ஸ்ரீ சஞ்சய் கர்க் கூறுகையில், ”புதுச்சேரியில் வரும் 2025ம் ஆண்டு மார்ச்சுக்குள் மேம்பாலப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.