கைவினைக் கலைஞர்களின் சரஸ் மேளா விற்பனை கண்காட்சி - துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்!


சென்னை: சென்னையில் வரும் டிச.27 முதல் நடைபெறவுள்ள கைவினைக் கலைஞர்களின் சரஸ் மேளா விற்பனை கண்காட்சியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்தியா முழுவதும் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்பு பொருட்களை காட்சிப் படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை, பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து ‘சரஸ்’ எனப்படும் விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சி’ வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

இந்த கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கண்காட்சியில் ஆந்திர மாநிலத்தின் அழகிய மரச் சிற்பங்கள், கொண்டப்பள்ளி பொம்மைகள், குஜராத் மாநிலத்தின் கைத்தறி ஆடைகள், பீகார் மாநிலத்தின் மதுபாணி ஓவியங்கள், கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகள், மகாராஷ்டிரா மாநில கோண்ட் பழங்குடியினரின் வண்ண ஓவியங்கள் என கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

இத்துடன் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார்கோயில் குத்து விளக்குகள், ஈரோடு தரை விரிப்புகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், கன்னியாகுமரி வாழை நார் பொருட்கள், கரூர் கைத்தறி துண்டுகள், தூத்துக்குடி பனை பொருட்கள், விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள் போன்றவையும் விற்கப்படும்.

இத்தகைய சிறப்பு மிக்க சரஸ் மேளா கண்காட்சியானது டிச.27 முதல் ஜன 9ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் மேளாவில் உணவு அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

x