கோவை: முன்னாள் பிரதமர், பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக இன்று காலை பாஜக மாவட்ட அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு, வாஜ்பாய் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், தலைமை வகித்து இன்று பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
மற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், முன்னாள் எம்எல்ஏ, சேலஞ்சர் துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.எம்.சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணபதி மண்டல் தலைவர் சிவக்குமார், தொழில் பிரிவு மண்டல் தலைவர் வீரராசன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் இன்று அணிவித்தார்.