டங்ஸ்டன் சுரங்க ஏலம்: மத்திய, மாநில அரசுகளின் கூட்டு சதி அம்பலம்: பி.ஆர்.பாண்டியன் கோபம்


மதுரை: டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியில் மத்திய மாநில அரசுகள் கூட்டு சதி அம்பலமாகியுள்ளது. தமிழக அரசு அரிட்டாபட்டி பகுதியை சுற்றிய 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர், தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. இதனையறிந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அரிட்டாபட்டி பகுதியில் ஏலத்தை நிறுத்தவும், மற்ற பகுதிகளில் மறு ஆய்வு செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஏலம் விடும் வரை தமிழக அரசு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

மேலும், தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்யும் அதிகாரம் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளது. அவ்வாறு தேர்வாகும் நிறுவனங்களோடு குத்தகை உரிமை, அதிலிருந்து வரும் வருவாய் முழுவதும் மாநில அரசுகளுக்கு மட்டுமே சொந்தம் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு சதி அம்பலம் ஆகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொருவரையும் குற்றம்சாட்டி தப்ப நினைக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு அரிட்டாப்பட்டி பகுதியை தாரை வார்க்கும் மத்திய மாநில அரசுகளின் கூட்டு சதியை கண்டிக்கிறோம்.

எனவே தமிழக அரசு, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களையும் உள்ளடக்கி பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் பெருக்கம், தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து தொல்லியல் துறை, வேளாண்துறை, சுற்றுச்சூழல் துறை மூலம் அரசாணைகள் வெளியிட வேண்டும். மத்திய அரசு அதனை ஏற்று மறு ஆய்வுக்கான அறிவிப்பை கைவிட முன்வர வேண்டும். இல்லையெனில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்று பி.ஆர்.பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

x