விழுப்புரம்: தற்போது துரைமுருகன் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முதல்வராக இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் துணை முதல்வராக இருக்க வேண்டும். ஆனால் திமுக-வின் தியாகி உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் கடந்தும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ”உயர்நீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பளித்த பின் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்த போது 7 காரணங்களில் 6 காரணங்கள் சரியாக உள்ளது. 7 வது காரணம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அக்கணக்கெடுப்பை நடத்த திமுக அரசுக்கு மனமில்லை. நான் முதல்வரை சந்தித்து தனி ஒதுக்கீடு குறித்து 35 நிமிடம் நான் கூறினேன். சாதிவாரி கணக்கெடுப்பு எங்கள் வேலை இல்லை. மத்திய அரசின் வேலை என திமுக அரசு தட்டிக்கழிக்கிறது.
மற்ற மாநிலங்களான தெலங்கானாவில் இக்கணக்கெடுப்பு எடுத்து வருகிறார்கள். நீங்கள் இக்கணக்கெடுப்பு எடுக்க மறுப்பது வன்னியர்கள் மீதான வன்மம் தானே?. திமுகவை வளர்த்தது வன்னியர் தான். முதன்முதலில் திமுக போட்டியிட்டு வென்ற 15 எம்எல்ஏ-க்களில் 14 பேர் வன்னியர்கள் வாழும் வட மாட்டங்களில் போட்டியிட்டு வென்றவர்கள். அடுத்து வென்ற 50 இடங்களில் 43 இடங்கள் வன்னியர் வாழும் பகுதியாகும். வன்னியர்கள் மீதான இனவெறி துரோகம் திமுகவின் பிறவி குணம். திமுக அமைச்சர் வீர பாண்டியார் கூறியது, எனக்கு தலைவர் கலைஞர், என் சமூகத்திற்கு தலைவர் மருத்துவர் ராமதாஸ் என்றார்.
அதனால் ஸ்டாலின் அவரை ஓரம் கட்டினார். தற்போது துரைமுருகன் பொதுச்செயலாளராக உள்ளார். அவர் முதல்வராக இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் துணை முதல்வராக இருக்க வேண்டும். ஆனால் திமுகவின் தியாகி உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது. கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய நினைத்தபோது, கடற்கரையில் யாரையும் அடக்கம் செய்யக்கூடாது என்ற பாமக தொடுத்த வழக்கு திரும்பப்பெறப்பட்டது” என்று ராமதாஸ் தெரிவித்தார்.