எம்ஜிஆரை எல்லா மதத்தினரும் போற்றினார்கள்; பிரதமர் மோடி அப்படியா?- அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கேள்வி


சென்னை: எம்ஜிஆரை யாருடனும் ஒப்பிட முடியாது. சாதி, சமயம் பார்க்காதவர். வேறுபாடு பார்க்காதவர். மத ரீதியாக அரசியல் செய்யாதவர். இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லோருமே எம்ஜிஆரை போற்றினர். பிரதமர் மோடியை அவ்வாறு போற்றுகிறார்களா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி, எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டியிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எம்ஜிஆரை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஏழை, எளிய மக்களுக்குக்காக தன்னை அர்ப்பணித்து முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட தலைவர் எம்ஜிஆர். அவரது கனவுகளை நனவாக்கிய ஜெயலலிதாவின் ஆசியுடன், தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் 43 மாத ஹிட்லர் ஆட்சிக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும்.

மோடிக்கும், எம்ஜிஆருக்கும் பல பொருத்தங்கள் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அப்படி என்ன பொருத்தம் இருக்கிறது? எம்ஜிஆரை யாருடன் ஒப்பிடமுடியாது. வரலாற்றில் முத்திரை பதித்தவர். சாதி, சமயம் பார்க்காதவர். வேறுபாடு பார்க்காதவர். மத ரீதியாக அரசியல் செய்யாதவர். இதை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லோருமே எம்ஜிஆரை போற்றினர். பிரதமர் மோடியை அவ்வாறு போற்றுகிறார்களா? சமூக நீதி என்ற அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை எம்ஜிஆர் தான் கொண்டுவந்தார்.

இன்றைக்கு பழங்குடியினர், ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு அதிமுக தான் காரணம். ஆனால் மதத்தால் பிரிவினை வாதம் செய்து கொண்டிருப்பது தான் பாஜகவின் வேலையாக இருக்கிறது. இதில் சம நிலை எங்கே இருக்கிறது? எனவே எந்த நிலையிலும் எம்ஜிஆரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட முடியாது. மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாமாகத்தான் இதை பார்க்க முடியும்’ என்று ஜெயக்குமார் கூறினார்.

x