பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படுகிறார்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


சென்னை: பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரைப் பற்றி பேசியும் புகழ்ந்தும் அவரது வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதுதான் அவரது தனித் தன்மை என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தந்தை பெரியார் 51-வது நினைவு நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது, “திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடம் இருந்து கைத் தடியை பரிசாகப் பெற்றபோது என்னையே நான் மறந்துவிட்டேன். வாழ்க்கையில் எத்தனையோ பரிசு எனக்கு வழங்கப்பட்டிருந்தாலும் இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது. போதும், எனக்கு இது போதும். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத் தடி ஒன்றே போதும்.

தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். இங்கு வரும்போதெல்லாம் உணர்ச்சியை எழுச்சியைப் பெறுவேன். ஆண்டு ஆண்டுகாலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும் சுய மரியாதை பெற்று மேலெழுந்து நிற்கவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு பல்வேறு தியாகங்களைப் புரிந்து நமது நலனுக்காக உழைத்த ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மறைந்த நாள் இந்நாள்.

பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். அந்தப் பயணத்தை நாம் தொடர்வோம் என்று கருணாநிதி சொன்னார். அதுபோல பெரியாரின் தொண்டராக நாம் இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளோம். மானுட வளர்ச்சிக்காக அவர் முன்வைத்த முற்போக்கு கருத்துகளுக்காக பழமைவாதிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்தார். ஊருக்குள் வர தடை, கோயிலுக்குள் நுழையத் தடை, பேச, எழுத தடை, பத்திரிகை நடத்த தடை, போராட்டம் நடத்த தடை இருந்த அந்தக் காலத்தில் அத்தனை தடைகளையும் உடைத்து அவர் வீதியில் மட்டும் அவர் நுழையவில்லை. நம் அனைவரின் மனதிலும் நுழைந்தார்.

பெரியார் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரைப் பற்றி பேசியும் புகழ்ந்தும் அவரது வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதுதான் அவரது தனித் தன்மை. வைக்கம் வீரராக வலம் வந்த பெரியாருக்கு கேரளாவில் புதிய மாளிகையும், கம்பீரமான சிலையும், இளைய சமுதாயத்தினருக்கு பயன்படும் வகையில் பெரிய நூலகமும் திறந்துவைக்கப்பட்டது. அப்போது மெய்மறந்து அந்த நிகழ்ச்சிக்கு வந்த வீரமணி, என்னை மனதாரப் பாராட்டினார். இன்னும் நீங்கள் என்னை நிறைய பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும். அதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

x