காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போலீஸாரின் தடையை மீறி பெரியார் நினைவு தின பேரணி நடத்த முயன்ற 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றம் சார்பில் பெரியார் நினைவு தினத்தையொட்டி பேரணியாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய முடிவு செய்திருந்தனர். இதன்படி இந்த அமைப்பினர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் காவல் துறை சார்பில் ஊர்வலமாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பெரியார் சிலைக்கு அந்த இடத்தில் கூடி மாலை அணிவிக்க தடை விதிக்கப்படவில்லை.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்று ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தற்கான காரணமாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட கடிதத்தை மக்கள் மன்றம் அலுவலகம் அருகே போலீஸார் ஒட்டிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடையை மீறி ஊர்வலம் செல்லவும் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கூடினர்.
மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ், நிர்வாகி ஜெஸி ஆகியோர் தலையில் சுமார் 300 பேர் திரண்டு ஊர்வலமாக பெரியார் சிலை நோக்கி செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த இடத்திலேயே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஊர்வலம் நடத்த முயன்ற 300 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என பலரும் குடும்பமாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.