மத்திய அரசின் புதிய நடைமுறையால் குடியரசு தின அணிவகுப்பில், இனி 2026-ல்தான் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று முன்தினம் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘குடியரசுதின விழாவில், தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் அணிவகுப்பில், தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக் காலங்களில் இடம்பெறுவது மரபு. ஆனால் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசுதின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத நிலை உருவாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்துக்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-ம் ஆண்டு முதல் குடியரசுதின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்புதர வேண்டும் என்பதால், மாநிலங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் சார்பில் தொடர்ந்து 2 ஆண்டுகள் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமேயானால், அடுத்து வரும் 3-ம் ஆண்டு வாய்ப்பு வழங்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருந்தாலும், அந்தந்த மாநிலங்களின் சார்பில் வழங்கப்படும் சிறந்த கருப்பொருள்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை கடமைப்பாதையில் பங்கேற்காமல், அணிவகுப்பு நிறைவு பெற்ற பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற அரசின் நடைமுறைகளை, உள் விவகாரங்களை ஒரு முதல்வராக பணியாற்றியவர் என்பதையும் மறந்துவிட்டு, யாரோ எழுதித்தரும் தகவல்களின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதிமுக ஆண்ட 10 ஆண்டுகளில் 2012, 13, 15, 18 ஆகிய ஆண்டுகளில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவில்லை என்கின்ற விவரமே அவருக்கு தெரியவில்லை. அப்போது, மத்திய அரசு தற்போது கொண்டு வந்த விதிகளும் இல்லை. இனி வரும் காலங்களில் முதல்வர் ஸ்டாலின், அவரது ஆட்சியை பற்றி குறை கூறுவதை நிறுத்திவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.
அதேநேரம், மத்திய அரசு கூறியுள்ள நடைமுறையை எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றாமல் உத்தரபிரதேசம், குஜராத்துக்கு தொடர்ந்து 3-வது முறை அனுமதித்துவிட்டு தமிழகத்துக்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயமும் நேர்மையும் அற்ற; பாரபட்சமான செயல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.