அரசு ஊழியர்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரம் அல்ல: உயர் நீதிமன்றம் உத்தரவு


அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அந்த தகவல்களை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத் துறையில் உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளிப்ரியன் என்பவரது பணிப்பதிவேடு விவரங்கள், சொத்துகள் மற்றும் கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால் இந்த விவரங்கள் அரசு ஊழியர் தொடர்பான தனிப்பட்ட விவரங்கள் எனவும், அந்த விவரங்களை வழங்க முடியாது என்றும், அவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறி தகவல்கள் வழங்கப்படவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சட்ட விரோதம்: இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி, ‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் அரசு ஊழியர்களின் சில தனிப்பட்ட விவரங்களை வழங்க விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஊழியர்களின் அரசுப் பணி சார்ந்த விவரங்களையும், சொத்து மற்றும் கடன் விவரங்களையும் வழங்க எந்த தடையும் இல்லை. அரசு ஊழியர்களின் இதுபோன்ற தகவல்களை வழங்க மறுப்பது சட்டவிரோதமானது’’ என வாதிட்டார்.

உத்தரவு ரத்து: அதையடுத்து நீதிபதி, ‘‘பொதுவாக அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கும் வகையிலான தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்றாலும், அரசு ஊழியர்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என மறுக்க முடியாது. அரசு ஊழியர்களி்ன் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்பதால் அவற்றில் ரகசியம் காக்க முடியாது. ஒருவேளை மறுக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை தெளிவாக கூற வேண்டும். எனவே இந்த தகவல்களை வழங்க முடியாது என மாநில தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக மனுதாரர் கடந்தாண்டு அளித்த மனுவை மாநில தகவல் ஆணையம் மீ்ண்டும் சட்டப்படி பரிசீலித்து 2 மாதங்களில் தீர்வு காண வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

x