திருநெல்வேலி அருகே கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டன.
திருநெல்வேலி அருகே கோடகநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவு கொட்டப்பட்ட விவகாரம், தமிழகம் மற்றும் கேரளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘மருத்துவ கழிவை, கேரள அரசே அகற்ற வேண்டும்’ என்று, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, கழிவை லாரிகளில் எடுத்துச் செல்லும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் சாஷ்ஷி, சுகாதாரத் துறை அலுவலர் கோபகுமார் மற்றும் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகள் குழு அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் கொண்டாநகரம் செல்லும் காட்டுப்பாதையில் கழிவை ஏற்றிச் சென்ற லாரி மண்ணில் சிக்கியது. இதனால், கழிவை அகற்றும் பணி தாமதமாகியது. நேற்று 2-வது நாளாக இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, கேரளாவிலிருந்து 5 டிப்பர் லாரிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இலந்தைகுளம், வேளார்குளம் கோடகநல்லூர், பாரதியார் நகர், திடியூர் ஆகிய பகுதியில் இருந்து மருத்துவக் கழிவு மற்றும் பிற வகை கழிவு முற்றிலுமாக அகற்றப்பட்டு, 18 லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. பழவூர், கொண்டாநகரம் ஆகிய பகுதிகளில் இருந்து கழிவு அகற்றும் பணி 2-வது நாளாக நடைபெற்றது.
கேரள கழிவை, இங்கு கொண்டு வந்து கொட்டியது தொடர்பாக, திருநெல்வேலி அருகே சுத்தமல்லியைச் சேர்ந்த மாயாண்டி, மனோகரன், சேலம் மாவட்டம் ஓமநல்லூரைச் சார்ந்த லாரி ஓட்டுநர் செல்லத்துரை, கேரள மாநில கழிவு மேலாண்மை அலுவலர் நிதின் ஜார்ஜ் மற்றும் கேரள கழிவு அகற்றும் ஏஜன்டாக செயல்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த சடானா நந்தன் ஷாஜி ஆகிய 5 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.