மதுரை: பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொது நல மனு தாக்கல் செய்த பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த உஷா மகேஸ்வரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "மதுரை எல்லீஸ் நகரில் பொதுச் சாலையை சில தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். அவர்கள் சாலையை மக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் வேலி அமைத்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, எல்லீஸ் நகர் பொதுச் சாலையில் வேலி அமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுக்க அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. என் மனுவை பரிசீலித்து பொதுச்சாலையை மக்கள் பயன்படுத்த இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், ஏடி மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மனுதாரருக்கும் வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நபர்களுக்கும் இடையே நிலத் தகராறு இருப்பது தெரிய வருகிறது. அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் பொதுநல வழக்கு என்ற பெயரில் இந்த மனுவை தாக்கல் செய்தது ஏன் என்பது தெரியவில்லை.
பொது நல வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பொது நல வழக்கில் தனி நபர் நலன் இதுவும் இருக்கக் கூடாது. அவ்வாறு இல்லை என்பதை மனுவில் மனுதாரர்கள் குறிப்பிட வேண்டும். அதையும் மீறி மனுதாரருக்கு தனிப்பட்ட விருப்பம் இருப்பது, மற்றவர்களுக்கு தொல்லை அளிக்கும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் கண்டுபிடித்தால் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பொதுநல மனுவாக கருத முடியாது. சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியதற்காக மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.