சென்னை: மீண்டும் திமுக ஆட்சி அமையும் என மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம்" என்றும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "200 இடங்களுக்கு மேல் வெல்வோம்" என்றும் கூறியிருக்கிறார். இவர்கள் திமுகவின் 75 ஆண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். திமுக என்ற கட்சி கருணாநிதியின் குடும்ப பிடிக்குள் வந்த பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வென்றதில்லை.
எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு இருக்கும் போதும், எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்காத போதும் மட்டுமே திமுக தேர்தலில் வென்றிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும், நிலையற்ற தன்மையினாலும் மட்டுமே திமுக கூட்டணி தேர்தலில் வென்று வருகிறது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த நிலை கண்டிப்பாக இருக்காது. திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமையப்போவது உறுதி.
எனவே "ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம், 200 இடங்களுக்கு மேல் வெல்வோம்" என்று "தந்தையும், மகனும்" பகல் கனவு காண வேண்டாம். கடந்த 2006 -2011 திமுக ஆட்சியின் போது இப்படித்தான், அடுத்து நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று திமுகவினர் வீர வசனம் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லை. அந்த நிலைதான் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஏற்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.