திண்டிவனம்: தண்டவாளத்தில் விரிசல்... சாமர்த்தியமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர்!


விழுப்புரம்: திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அதிர்வுகள் கேட்ட நிலையில், ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சென்னை- புதுச்சேரி பயணிகள் ரயில் திண்டிவனம் அருகே வந்து கொண்டிருந்த போது தண்டவாளத்தில் கடுமையான அதிர்வு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் திடீரென கடுமையான அதிர்வு ஏற்படுவதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்று தண்டவாளத்தை பார்த்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர், இது குறித்து உடனடியாக ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சரியான நேரத்தில் தண்டவாள விரிசலை ரயில் ஓட்டுநர் கண்டுபிடித்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணி நடைபெற்றது. தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அந்த ரயில் புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக பல்வேறு ரயில்கள் தாமதமாக சென்றது.

x